சவக்குழி வெட்டிக் கொண்ட காங்கிரஸ்
January 1, 2012தனக்காக சவக்குழி வெட்டிக் கொண்ட காங்கிரஸ்
முஸ்லிம்களை முன்னேற்றுவதற்காக மத்திய அரசு உள்ஒதுக்கீடு அளிக்க முடிவு செய்துள்ளது குறித்து தொடர்ந்து கசியவிடப்பட்ட ஊகங்களாலும், மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித் கொடுத்த பில்டப்பாலும் ஏதோ நல்ல செய்தி வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் சமுதாயத்தில் நாளுக்கு நாள் அதிகமாகி வந்தது.
இதோ வருகிறது அதோ வருகிறது என்று காத்திருந்த அந்த அறிவிப்பு முஸ்லிம் சமுதாயத்துக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் வந்துள்ளது. இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு - முஸ்லிம்களுக்கு அல்ல- 4.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்பது தான் அந்த அறிவிப்பு.
இந்தியாவில் பல்வேறு சிறுபான்மை மக்கள் இருந்தாலும் முஸ்லிம் சமுதாயம் தான் அனைத்து சிறுபான்மை சமுதாயங்களிலும் அதலபாதாளத்தில் கிடக்கிறது என்று கோபால் சிங் கமிஷன், நீதிபதி ராஜேந்திர சச்சார் கமிஷன், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை தங்கள் அறிக்கைகளில் தக்க ஆதாரங்களுடனும் புள்ளிவிபரங்களுடனும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிக்கைகள் நாடாளுமன்றத்திலும் வைக்கப்பட்டு அரசால் ஏற்கப்பட்டுள்ளன.
அந்த அறிக்கைக்கும் இந்த உள்ஒதுக்கீட்டுக்கும் சிறிதளவும் சம்மந்தம் இல்லை. நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் முஸ்லிம்களுக்கு 10 சதவிகிதமும் மற்ற சிறுபான்மையினருக்கு ஐந்து சதவிகிதமும் தனி இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தார். அரசே நியமித்த ஒரு கமிஷனின் பரிந்துரை இந்த அளவுக்கு அலட்சியப்படுத்த முடியுமா என்று நினைக்கும் அளவுக்கு மத்திய அரசின் அறிவிப்பு அமைந்துள்ளது.
தேர்தல் அறிக்கையில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு தருவோம் எனக் கூறி ஆட்சி பீடம் ஏறிய காங்கிரஸ் கட்சி, சிறுபான்மை மக்களுக்கு 4.5 சதம் தருவோம் என்று அப்போதே தெளிவாகக் கூறியிருந்தால் காங்கிரஸை முஸ்லிம்கள் சவக்குழிக்கு அனுப்பி இருப்பார்கள்.
முஸ்லிம்களுக்கு மட்டும் பத்து சதவிகிதம் அளிக்குமாறு மிஸ்ரா கமிஷன் சொல்லி இருக்கும் போது மொத்த சிறுபான்மை மக்களுக்கும் சேர்த்து பதினைந்து சதவிகிதம் என்று அறிவித்திருப்பதை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கையாகவே முஸ்லிம் சமுதாயம் கருதுகிறது.
இதில் முஸ்லிம்களுக்குத் தனியாக எந்த அளவும் கூறப்படவில்லை. எந்த சிறுபான்மை மக்கள் மூலமும் இடங்களை நிரப்பிக் கொள்ள இந்த ஒதுக்கீடு வகை செய்கிறது.
பொதுவாக அதிகாரிகள் மனதில் முஸ்லிம் என்றாலே வெறுப்பு விதைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நாலரை சதவிகித்திலும் முஸ்லிம்கள் பயனடையக் கூடாது என்று காய் நகர்த்துவார்கள். சோனியாவின் தாய்மதத்தைச் சேர்ந்த் கிறித்தவர்களுக்கும், மன்மோகன்சிங்கின் மதத்தைச் சேர்ந்த சீக்கியர்களுக்கும் தான் இதில் பயன் கிடைக்கும். 4.5 சதவிகிதமும் இவர்களைக் கொண்டே நிரப்பப்படும். மேலும் சிறுபான்மை சமுதாயங்களில் இந்த இரண்டு சமுதாயங்களில் தான் படித்தவர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்த இட ஒதுக்கீடு இல்லாமல் 27 சதவிகிதம் பொதுவாக இருந்த போது கிடைத்து வந்த இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் கூட இனி முஸ்லிம்களுக்கு இல்லாமல் போய்விடும் அளவுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துள்ளது.
முஸ்லிம்கள் தங்களுக்கு என தனி இட ஒதுக்கீட்டைத் தான் கேட்டார்கள். சிறுபான்மை என்ற அடிப்படையில் பலரையும் சேர்த்துக் கொண்டு வழங்கும் போலி தனி இடஒதுக்கீட்டைக் கோரவில்லை. இதற்குத் துரோகம் செய்யப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் 20 சதவிகித இட ஒதுக்கீட்டைக் கோரி வந்தார்கள். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா அவர்கள் பரிந்துரைத்தபடி பத்து சதமாவது கிடைக்கும் என்று முஸ்லிம்கள் அதிக நம்பிக்கை வைத்திருந்தனர். அந்த நம்பிக்கைக்கும் துரோகம் செய்துள்ளது காங்கிரஸ் அரசு.
அதுவும் மறுநாள் ஐந்து மாநில தேர்தலுக்கான தேதிகளை நிர்ணயித்துக் கொண்டு இட ஒதுக்கீடு சட்ட்த்தை காங்கிரஸ் நிறைவேற்றியுள்ளது. முஸ்லிம் சமுதாயம் மறுபரிசீலனை செய்யக் கோரினால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இனி ஒன்றும் செய்ய முடியாது என்று தட்டிக் கழிப்பதற்காக திட்டமிட்டு நாடகமாடியுள்ளது.
முஸ்லிம்களுக்கு சிறிதும் பயனில்லாத இந்த இட ஒதுக்கீட்டை -முன்னர் இருந்த அளவையும் தட்டிப் பறிக்கும் இந்த இட ஒதுக்கீட்டை - வழங்காமல் இருந்தால் ஐந்து மாநிலத் தேர்தல்களில் ஓரளவு முஸ்லிம்களின் வாக்குகளைப் பெற்றிருக்க முடியும். முஸ்லிம்களின் வாய்ப்புகளைத் தட்டிபறிக்கும் இந்தச் சட்ட்த்தினால் ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தனக்குத் தானே சவக்குழி வெட்டிக் கொண்டதாகவே நாம் கருதுகிறோம்.
உணர்வு தலையங்கம்
Posted by Mohamed Hamad. Posted In : உணர்வு தலையங்கம்