முல்லைப் பெரியாறுக்காக போராட மறுப்பது ஏன்

கேள்வி: கம்பம் பகுதியில் முஸ்லிம் ஜமாத் சார்பாக  அனைத்து இயக்கங்களும் தமது  பேணர்களை விட்டுவிட்டு ஜமாஅத்தோடு ஒருங்கிணைந்து  முல்லைப் பெரியார் பிரச்சனைக்காக பேரணி நடத்துகையில், TNTJ அன்பர்கள் கலந்து  கொள்ளாதது ஏன் என்று மக்கள் விமர்சிக்கிறார்கள். தாங்கள் ?என்ன?

- அபூதாஹீர், கம்பம்

முல்லைப் பெரியாறாக இருந்தாலும் வேறு எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் இஸ்லாத்துக்கு ஒரு நிலைபாடு உள்ளது. தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் அதுதான் நிலைபாடு.

கேரளாவிலும், தமிழகத்திலும் எந்த இயக்கங்களுக்கு அடித்தளம் உள்ளதோ அந்த இயக்கத்தினர் முல்லைப்பெரியாறு விவகாரத்தில் தமிழக மக்களை ஏமாற்ற தமிழகத்தில் ஒரு வேடமும், கேரள மக்களை ஏமாற்ற கேரளத்தில் ஒரு வேடமும் போட்டிருக்கின்றனர்.

காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக, முஸ்லிம் லீக், எஸ்டிபிஐ போன்ற கட்சிகளின் சந்தர்ப்பவாதம் இதற்கு உதாரணமாக உள்ளது.

திமுக, அதிமுக, மதிமுக, பாமக மற்றும் பல உதிரிக்கட்சிகளுக்கு கேரளத்தில் அடித்தளம் இல்லை. எனவே இவர்கள் மட்டும் இண்டஹ் விஷயத்தில் மட்டும் ஒரே நிலைபாட்டில் உள்ளனர். ஆனால் இவர்கள் கூட கூடங்குளத்துக்கு ஒரு நிலையும் முல்லைப் பெரியாறுக்கு வேறு ஒரு நிலையும் எடுத்து தமக்குத்தாமே முரண்பட்டுக் கொள்கின்றனர்.

அணுமின் நிலையம் அமைந்தால் தங்களுக்குப் பாதிப்பு என்று கூடங்குளம் மக்கள் அர்த்தமில்லாமல் அச்சப்படுவது நியாயம் என்றால் கேரள மக்களின் அச்சமும் நியாயம் என்று இவர்கள் சொல்ல வேண்டும்.

அல்லது கேரள மக்களின் அச்சம் அர்த்தமற்றது என்றால் கூடங்குளம் மக்களின் அச்சமும் அர்த்தமற்றது என்று கூற வேண்டும்.

கேரள அரசின் போக்கினால் தமிழகம் பாதிக்கப்படுவது போல்தான் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களின் போக்கினால்  தமிழக மக்களும் இந்திய மக்களும் மின்சாரம் போதாமல் பாதிக்கப்படுவார்கள்.

இப்படி இருந்தும் முல்லைப்பெரியாறுக்கு ஒரு நிலையும் கூடங்குளத்துக்கு வேறு ஒரு நிலையும் எடுப்பதில் எந்த நியாயமும் இல்லை.

இப்படி அனைவரும் இரட்டை நிலை எடுக்கின்றனர். ஒரு முஸ்லிம் எப்போதும் இரட்டை நிலை எடுப்பவனாக இருக்க முடியாது என்பதால் சந்தர்ப்பவாதிகளிடம் இருந்து நாம் விலகி இருக்கிறோம்.

மேலும் இது இரண்டு அரசுகள் சம்மந்தப்பட்ட விஷயம். சட்டப்படி மட்டுமே தீர்க்க வேண்டிய பிரச்சனை. மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலம் போல் இங்கிருந்து படை எடுத்துச் சென்று முல்லைப் பெரியாறு அணையை நாம் கைப்பற்ற முடியாது. இரண்டு அரசுகளும் தங்கள் நிலைபாட்டை விளக்கி நீதிமன்றத்தை அணுகுமாறு விட்டு விட வேண்டும். நீதிம்னறம் அளிக்கும் தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டும் என்ற எண்ணத்தை மக்கள் மத்தியில் விதைக்க வேண்டும்.

இரண்டு மாநில அரசுகளும் தத்தமது நிலையில் வெற்றி அடைவதற்குப் பாடுபட்டு வருகின்றன.

இதில் அரசியல் கட்சிகள் ஒதுங்கிக் கொண்டு சட்டப்படி வெற்றி பெறுவதற்கு தங்களால் இயன்ற உழைப்பை வழங்கலாம். அல்லது தங்களின் உணர்வை வெளிப்படுத்த அறவழியில் போராட்டங்கள் நடத்தலாம். ஆனால் நமக்கும் மற்றவர்களுக்கும் கேடு விளைவிக்கும் வகையில் போராட்டம் நடத்துவது முட்டாள்தனமானதாகும்.

கேரளாவுக்குச் செல்லும் உணவுப் பொருட்களையும், வாகனங்களையும் தடுத்து நிறுத்துவது அறிவுடமையாகுமா? இதனால் கேரள மக்களுக்குக் கஷ்டம் ஏற்படலாம். ஆனால் நஷ்டம் தமிழக வியாபாரிகளுக்கும் விவசாயிகளுக்கும்தான்.

இங்கிருந்து காய்கறிகள் செல்லாவிட்டால் காய்கறி இல்லாத உணவு வகைக்கு கேரள மக்கள் பழகிக் கொள்வார்கள். ஆனால் காய்கறி உற்பத்தி செய்யும் விவசாயிகளின் உற்பத்திப் பொருள்கள் அழுகி நாசமாகிறதே? அதற்கு யார் இழப்பீடு தருவார்கள்? லாரி மற்றும் வாடகைக் கார் ஓட்டுனர்களான தமிழர்களின் பிழைப்பில் மண் அள்ளிப் போடுவதுதான் தமிழர்களுக்குச் செய்யும் நன்மையா?

வியாபாரிகளும் வாகன ஓட்டிகளும் வன்முறையாளர்களுக்குப் பயந்து கடைகளை அடைக்கின்றார்கள். வாகனங்களை இயக்காமல் உள்ளனர். வழக்கமாக யார் மிரட்டினாலும் இப்படித்தான் நடப்பார்கள். உள்ளூர அவர்கள் சந்திக்கும் சிரமங்களுக்கு யார் பொறுப்பு?

கேரள அரசாங்கத்தின் செயலுக்காக கேரள மக்களைச் சிரமப்பட வைப்பதிலும் நியாயம் இல்லை.

மேலும் கேரளாவிலும் தமிழகத்திலும் உள்ள வெறியர்கள் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு பதிலடி கொடுப்பதும், வர்த்தக நிறுவனங்களைச் சூறையாடுவதும் மலையாளியே வெளியேறு தமிழனே வெளியேறு என்று காட்டுக் கூச்சல் போடுவதும் இன்னும் பல வெறியாட்டங்களும் நாகரிகமான சமுதாயத்திற்கும் மனிதத்தன்மை உள்ளவர்களுக்கும் ஏற்றதல்ல.

தமிழனும் மலையாளியும் காட்டுமிராண்டிகள் என்ற சித்திரம் இதன் மூலம் உலக அரங்கில் பதிவு செய்யப்படுகின்றது.

இன மொழி அடிப்படையில் மனிதனுக்கு மனிதன் அநீதி செய்வதை இஸ்லாம் ஏற்றுக் கொள்ளாது. தவ்ஹீத் ஜமாஅத்தும் ஏற்றுக் கொள்ளாது.

 உணர்வு 16:18