ஒரு மனிதர் தவறு செய்தால், அவரை மன்னிக்க வேண்டும். அவருக்கு கொடுக்க வேண்டிய தான தருமங்களை கொடுக்க வேண்டும் என்று குரான் வசனத்தை மேற்கோள் காட்டி கடந்த ஜூம்மா உரையில் நீங்கள் கூறியதை நான் கேட்டேன். அப்படி என்றால் நீங்கள் ம.ம.க., இ.த.ஜ.டி. போன்றவர்களை மன்னிக்கவே இல்லை. இது அந்த வசனத்தோடு ஒப்பிட்டால் முரண்படுகிறதே?

எச். முகமத் ரியாத், தொண்டி

பதில்: ஒருவருடன் நமக்குப் பகை இருக்கிறது என்பதற்காக அவருக்குச் செய்ய வேண்டிய உதவிகளை நாம் மறுக்கக் கூடாது என்பதில் நம்மிடம் எந்த மாற்றமும் இல்லை. அந்த நிலைப்பாட்டில் நாம் இப்போதும் உறுதியாக இருக்கிறோம். நமக்குத் தீங்குகள் செய்தாலும் அதைப் பொருட்படுத்தக் கூடாது என்பதிலும் நம்முடைய கருத்தில் மாற்றம் ஏதும் இல்லை. அதனடிப்படையில் நீங்கள் சுட்டிக் காட்டும் இயக்கத்தவரும் தவ்ஹீத் ஜமாஅத்தில் ஏதேனும் உதவி கோரி வந்தால் அதற்கான விதிமுறை அவர்களுக்கும் பொருந்தும் போது அவர்களுக்கும் உதவி செய்ய தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எந்த மறுப்பும் இல்லை.

இது உதவி செய்வதற்குத் தான் பொருந்துமே தவிர மோசடி செய்ய துணை செய்வதற்குப் பொருந்தாது. அவர்களை சமுதாய தலைவராக ஆக்குவதற்கு பொருந்தாது.

உங்கள் நெருக்கமான உறவினர் ஊர்ப் பணத்தைச் சுரண்டுபவர் என்று வைத்துக் கொள்வோம். அவருடன் உங்களுக்குப் பகை இருக்குமானால் அதன் காரணமாக அவர் கேட்கும் உதவிகளைச் செய்ய நீங்கள் மறுக்கக் கூடாது. ஆனால் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் அவர் நிற்கிறார். அல்லது பள்ளிவாசல் முத்தவல்லி தேர்தலில் நிற்கிறார் என்றால் இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்
? அவரைத் தேர்வு செய்யாதீர்கள் என்று எச்சரிக்கை செய்ய வேண்டும். ஏனெனில் அவர் ஊழல் செய்வார் என்று உங்களுக்குத் தெரியும் போது அவருக்கு ஆதரவாக நீங்கள் இருக்கக் கூடாது. அவருக்கு உதவுவது என்பது அவரது தேவைக்கு உதவுவது தானே தவிர திருட்டுக்கு உதவுவது அல்ல.

இது போல் சுனாமி நிதியைத் திருடியவர்கள், பித்ரா நிதியைச் சாப்பிட்டவர்கள் மக்களிடம் ஷேர் சேர்த்து இலட்சக்கணக்கில் மோசடி செய்தவர்கள் என்று தெரியும் போது அவர்களிடம் மக்கள் ஏமாந்து விடக் கூடாது என்று எச்சரிக்கிறோம். அதே நேரத்தில் அவர்கள் தமது கஷடத்தைச் சொல்லி உதவி கேட்டால் அவர்களுக்கு கொடுக்க வேண்டாம் என்று நாம் கூறப் போவதில்லை.

தேவைக்கு உதவுதல் என்பது வேறு; அவர்களை சமுதாயத் தலைவர்களாக ஆக்க உதவுதல் என்பது வேறு.

உணர்வு 15:52