மதுவைத் தடை செய்ய போராட்டம் நடத்துவீர்களா?
கேள்வி: மது விலக்கை அமல்படுத்தக் கோரி மாநில அளவில் டி.என்.டி.ஜே. போராட்டம் நடத்துமா?
இஸ்லாம் மார்க்கம் மதுவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளதால் கட்டாயம் இதை ஒழித்துக் கட்ட ஒவ்வொரு முஸ்லிமும் பாடுபட வேண்டும். ஆனாலும் இது விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத் உள்பட எந்த முஸ்லிம் இயக்கமும் அவ்வளவு வீரியமாக களத்தில் இறங்கவில்லை.
காரணம் மதுவை ஒழிப்பதற்காக எந்தப் போராட்டம் நடத்தினாலும் அதற்கு அரசு செவி சாய்க்கப் போவதில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கிறது. காரணம் மதுக் கடைகளைத் திறந்ததால் தான் அரசுக்கு கனிசமான வருவாய் கிடைக்கிறது என்று ஆட்சியாளர்கள் முடிவு செய்து விட்டனர். அரசுக்கு வருவாய் கிடைக்க இது அல்லாத இலட்சக்கணக்கான வழிகள் உள்ளன. உண்மையான காரணம் இதுவல்ல. மதுவின் காரணமாக அதன் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள ஆளும் கட்சி எதிர்க்கட்சி பிரமுகர்களுக்கு தாறுமாறான வருவாய் கொட்டுவதே இதற்கு முக்கியக் காரணம்.
அதிகாரிகள் காட்டிலும் நல்ல மழை பெய்ய மது விற்பனை காரணமாக உள்ளது. எனவே அவர்கள் மக்கள் நலனைக் கவனிக்க மாட்டார்கள். மக்கள் குடித்து நாசமாகப் போவது பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை.
எனவே என்ன தான் கூப்பாடு போட்டாலும் மதுவை யாரும் ஒழிக்க மாட்டார்கள் என்ற முடிவுக்கு அனைவரும் வந்து விட்டதால் மதுவுக்கு எதிராக யாரும் போராட்டம் நடத்துவதில்லை. ஆனால் ஒரு கட்சியுடன் கூட்டணி முறிந்து விட்டால் அந்த அரசுக்கு எதிரான கருத்தை உருவாக்க இப்படி போராட்டம் நடத்துவார்கள். திமுக ஆட்சியில் தமுமுக நடத்திய போராட்டத்தை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அன்று திமுக உறவு கசந்த பின்னர் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் அதிமுக ஆட்சியிலும் அதே மதுக்கடை நீடித்து வந்த போதும் போராட்டம் நடத்தவில்லை. அதிமுக உறவு கசந்தால் தவிர மதுவுக்கு எதிராக இவர்கள் போராட மாட்டார்கள். மேலும் மதுவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் பலர் மதுவுக்கு அடிமையாக உள்ளதும் கவனிக்கத்தக்கது.
சடங்கு போல் இந்த போராட்டம் ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே நாம் போராட்டம் நடத்தவில்லை. ஜூலை 4 பேரணியை மிஞ்சும் வகையில் லட்சோபலட்சம் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தி அரசுக்கு கடும் எச்சரிக்கை விட்டால் தான் ஓரளவாவது பயன் கிடைக்கலாம். அடிக்கடி அத்தகைய போராட்டத்தை நடத்தும் அளவுக்கு பொருளாதார பலம் நம்மிடம் இல்லை.
உணர்வு 15:48
In : Q&A