பிற இயக்கத்தினருக்காக குரல் கொடுப்பீர்களா?
கேள்வி : தாராபுரம் டிஎன்டிஜே கிளையில் இருந்த முன்னாள் நிர்வாகிகள் சில பேர் தற்போது வேறு இயக்கத்தில் இருக்கிறார்கள். சில நேரங்களில் காவல் துறையினர் அவர்கள் மீது பொய்வழக்குப் போட்டு விடுகின்றனர். இம்மாதிரியான நேரங்களில் அவர்களுக்கு உதவலாமா? இதற்காக போராட்டங்களில் ஈடுபடலாமா? சில சகோதரர்கள் இதற்கு உதவலாம் என்றும் வேறு சிலர் நமக்கு எதிராகச் செயல்படும் அவர்களுக்கு உதவத் தேவையில்லை என்றும் கூறுகின்றனர். இப்பிரச்சினையை குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் விளக்குங்கள்.
பதில்: இது பொத்தாம் பொதுவாக பதில் சொல்லத் தக்க கேள்வி அல்ல. சந்தர்ப்பம் சூழ்நிலைகள் இன்னும் பல அம்சங்களைக் கவனத்தில் கொண்டு மாறுபட்ட முடிவுகள் எடுக்க வேண்டிய பிரச்சினையாகும்.
ஒருவர் அரசாங்கத்தின் மூலம் அல்லது காவல்துறை மூலமோ அல்லது ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகள் மூலமோ மத விரோத சக்திகள் மூலமோ பாதிக்கப்படுகின்றார் என்றால் அதன் முழு நிலைமையையும் ஆய்வு செய்த பின்னரே அவர்களுக்கு உதவுவதா வேண்டாமா என்பதில் தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்யும்.
ஒரு முஸ்லிம் முஸ்லிம் அல்லாத மக்களால் தாக்கப்படுகின்றார். அல்லது அவரது சொத்து சூறையாடப்படுகிறது என்றால் இது எதனால் ஏற்பட்டது என்று பார்க்க வேண்டும்.
அந்த முஸ்லிம் ஏற்கனவே முஸ்லிமல்லாதவரைத் தாக்கி அல்லது அவரது சொத்தைச் சூறையாடியதற்காகத் தான் தாக்கப்பட்டார் என்றால் இவருக்காக நாம் களம் இறங்கக் கூடாது. இத்தகையவர்களின் செயல்களை நாம் ஊக்குவிப்பதாக இது அமையும். அவர் செய்த தீய செயலின் விளைவை அவரே சுமக்கும் வகையில் அவரைத் தனிமைப்படுத்திவிட வேண்டும். இது போன்றவர்களின் செய்கைகளால் தான் வகுப்புக் கலவரங்கள் ஏற்பட்டு சமுதாயம் பாதிப்புக்கு உள்ளாகிறது என்பதை தவ்ஹீத் ஜமாஅத் கவனத்தில் கொள்ளும்.
எனவே பாதிக்கப்பட்டவர் மீது தவறு இல்லாத பட்சத்தில் மட்டுமே அவருக்கு உதவியாக தவ்ஹீத் ஜமாஅத் களத்தில் இறங்கும்.
ஒரு தனி முஸ்லிம் செய்த வன்முறை காரணமாக அவரைத் தாக்காமல் ஒட்டு மொத்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால் அப்போது அந்தத் தனி முஸ்லிமைத் தனித்து விட்டு விட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக தவ்ஹீத் ஜமாஅத் கண்டிப்பாக களத்தில் இறங்கும். இறங்க வேண்டும்.
தவ்ஹீத் ஜமாஅத் இந்த நிலைபாட்டை தக்க ஆதாரத்துடன் தான் எடுத்துள்ளது.
திருக்குர்ஆனின் 4:58, 4:135, 5:8, 6:152, 7:181 ஆகிய வசனங்கள் இதைத்தான் நமக்குப் போதிக்கின்றன.
நீதி வழங்கும் போது நம்மவர் மற்றவர் என்று வேறுபடுத்த இஸ்லாத்தில் அனுமதி இல்லை. நீதி அநீதி என்ற அடிப்படையில் மட்டும் தான் எந்தப் பிரச்சினையையும் பார்க்க வேண்டும்.
அது போல் சட்டத்தைக் கையில் எடுப்பதால் ஒருவர் பாதிப்புக்கு உள்ளானால் அவருக்கு ஆதரவாகவும் தவ்ஹீத் ஜமாஅத் குரல் கொடுக்காது.
ஒருவருடன் ஏற்பட்ட தகராறின் போது அவருடைய சொத்தைச் சேதப்படுத்தினால் அல்லது அவரை நையப் புடைத்தால் அதற்காக காவல்துறை வழக்கு பதிவு செய்யத் தான் செய்வார்கள்.
நானே சட்டத்தைக் கையில் எடுப்பேன். என் மேல் வழக்குப் போடக் கூடாது என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.
தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை சட்டப்படியும் ஜனநாயக அடிப்படையிலும் தான் முஸ்லிம்கள் நடக்க வேண்டும் என்ற கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் தான் முஸ்லிம்களுக்கு நன்மை உள்ளது என்று தவ்ஹீத் ஜமாஅத் கருதுகிறது.
இதைப் பேணாமல் அவர்களே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு பாதிப்பு ஏற்பட்ட பின்னர் ஜமாத்தை அணுகினால் அவர்களுக்கு ஜமாத் உதவாது. உதவினால் ஒவ்வொருவரும் இது போன்ற வழியில் இறங்குவார்கள். இதனால் முஸ்லிம் மக்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடும்.
தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக வேறு வழியின்றி எதிர்த் தாக்குதல் நடத்தியவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டால் என்ன நடந்ததோ அதற்கேற்ப வழக்குப் போடாமல் பயங்கரமான பிரிவுகளில் பொய் வழக்குப் போட்டால் அப்போதும் ஜமாஅத் அதைத் தட்டிக் கேட்கும்.
பாதிப்புக்கு உள்ளானவர்கள் நம்மிடம் எழுத்து மூலமாக உதவி கோரினால் மட்டுமே அவர்களுக்காக தவ்ஹீத் ஜமாஅத் உதவும். நம்மிடம் எழுத்து மூலம் உதவி கோராவிடில் அவர்களுக்காக உதவ முடியாது என்பதும் ஜமாத்தின் நிலைப்பாடாகும்.
பள்ளிவாசல் ஆக்கிரமிக்கப்பட்டதற்காக நாம் உயிரைக் கொடுத்து போராடக் களம் இறங்கினால் அந்த ஜமாத்தினர் எதிரிகளிடம் சமரசம் பேசிக் கொண்டு நாங்கள் சமாதானமாகப் போய் விட்டோம். தவ்ஹீத் ஜமாஅத் தான் பிரச்சினை செய்கிறார்கள் என்று நம்மை மாட்டி விட்ட முன் அனுபவம் காரணமாகவே இவ்வாறு செய்கிறோம்.
பிரச்சினை என்றவுடன் நம்மை அணுகுவதும் விளைவுகளைக் கண்டவுடன் பின் வாங்குவதும் அதிகமான மக்களின் மனநிலையாக உள்ளதால் எழுத்து மூலம் எழுதி உதவி கேட்டால் தவிர களம் இறங்குவதில்லை என்ற நிலைப்பாட்டை நாம் எடுத்துள்ளோம்.
இவ்வாறு நம்மிடம் உதவி கேட்பவர்கள் இதே பிரச்சினையை மற்ற இயக்கத்தினரிடம் ஒப்படைக்கக்கூடாது. ஒரே பிரச்சினையை இரண்டு இயக்கங்கள் கையில் எடுத்தால் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாது. மேலும் நமக்கிடையே முரண்பாடுகளும் பிரச்சினைகளும் ஏற்படும். ஒவ்வொரு இயக்கத்துக்கும் வழிமுறைகள் வேறுபடும். இதனாலும் பிரச்சினைகள் ஏற்படலாம்.
எனவே பாதிப்புக்கு உள்ளானவர்கள் எந்த இயக்கத்தின் பொறுப்பில் கொடுத்தால் நல்லது என்பதை சீர்தூக்கிப் பார்த்துவிட்டு ஏதாவது ஒரு இயக்கத்தின் கையில் அப்பிரச்சினையை ஒப்படைப்பது தான் அவர்களுக்கு நல்லது.
எனவே இந்தப் பிரச்சினையில் இறுதிவரை வேறு யாரிடமும் உதவி கேட்க மாட்டோம், தவ்ஹீத் ஜமாஅத்தின் வழிகாட்டுதல்கள் படி நடப்போம் என்ற உறுதி மொழியை இதற்காகவே நாம் கேட்கிறோம்.
பாதிக்கப்பட்டவர்கள் எந்த இயக்கத்தையும் சேராதவர்கள் என்றாலோ அல்லது தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக இல்லாத இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றாலோ மேற்கண்டவாறு உத்தரவாதம் பெற்றுவிட்டு உதவுவோம்.
ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை ஒழிப்பதே தங்கள் கொள்கை என்று நடப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு இந்த ஜமாஅத் உதவாது. அப்படித் தான் அல்லாஹ் நமக்கு வழி காட்டுகிறான்.
மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும் உங்கள் வீடுகளில் இருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான். மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடுவோர் உங்கள் இல்லங்களில் இருந்து உங்களை வெளியேற்றியோர் உங்களை வெளியேற்றியதற்கு உதவி புரிந்தோர் ஆகியோரை உற்ற நண்பர்களாக ஆக்குவதையே அல்லாஹ் உங்களுக்குத் தடை செய்கிறான். அவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வோரே அநீதி இழைத்தவர்கள்
(திருக்குர்ஆன் 60:8,9)
தமுமுக, விடியல், பொய்யன் ஜமாஅத் ஆகியன மார்க்க விஷயத்தில் நம்மோடு மோதுகின்றன. நம்மை ஒழிப்பதற்காக யாருடனும் அவர்கள் கூட்டுச் சேர்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உள்ள தலைமை தான் அவர்களுக்குப் பொறுப்பாகும். நாம் இவர்களுக்காக களம் இறங்குவது மேற்கண்ட வசனத்திற்கு எதிராக இருப்பதுடன் கடைசி நேரத்தில் அவர்களின் தலைமையின் கட்டளையை ஏற்று நம்மைக் காலை வாரி விட்டுவிடுவார்கள்.
எனவே தவ்ஹீத் ஜமாஅத்தை அழிப்பதையே கொள்கையாகக் கொண்டவர்கள் உதவி தேடினால் மேற்கண்ட இயக்கத்தில் நான் இல்லை என்ற உறுதிமொழியுடன் உதவி கோரினால் அதன் உண்மைத் தன்மையை அறிந்து அதற்கேற்ப ஜமாஅத் களத்தில் இறங்கும்.
இது அல்லாமல் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயம் ஒரு ஊரில் மற்ற மதத்தினாரால் பாதிக்கப்படும் போது அதை அனைவரும் திரண்டு எதிர்ப்பது தான் இயல்பானது. வகுப்புக் கலவரம் போன்ற நிலை ஏற்படும் போது எந்த இயக்கமும் சாராமல் எந்த இயக்கத்தையும் முன்னிலைப்படுத்தாமல் உள்ளூர் ஜமாஅத் களத்தில் நின்றால் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் ஊர் மக்களுடன் மக்களாக இணைந்து செயல்படலாம். ஜமாஅத்தின் பெயரையோ கொடியையோ இதில் பயன்படுத்தக் கூடாது.
உள்ளூர் ஜமாஅத் எடுக்கும் போராட்ட முறை இஸ்லாத்துக்கு எதிராகவோ நாட்டின் சட்டத்துக்கு எதிராகவோ இருந்தால் அப்போது அவர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.
இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போது ஒரு குறிப்பிட்ட இயக்கம் தன்னுடைய கொடி மற்றும் பெயருடன் அதைக் கையில் எடுத்தால் அது அந்த இயக்கத்தினரின் போராட்டமாக மாறி விடுகிறது என்பதால் அதில் ஒத்துழைக்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் மார்க்கத்துக்கு எதிராகவோ சட்டத்துக்கு எதிராகவோ விவேகமற்ற முறையிலோ வழி நடத்திச் செல்ல வாய்ப்பு உள்ளது.
பிரச்சினையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்று தீர்வு காணுங்கள் என்று கேட்டு போராட்ட வழிமுறையை தீர்மானிக்கும் முழு உரிமையைக் கொடுத்தால் நமது பெயரில் நமது கொடியைப் பயன்படுத்தி களம் இறங்கலாம்.
இப்படி இன்னும் கவனிக்க வேண்டிய அம்சங்கள் உள்ளன. அவற்றைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றவாறு தான் ஜமாஅத் முடிவு செய்யும்.
உணர்வு 15:45
In : Q&A