கேள்வி:  தவ்ஹீத்  சகோதரர்கள், அல்லாஹ் அனுமதி அளித்த குறைந்தபட்ச 2 திருமணமாவது செய்தால் என்ன?  வரதட்சணை கொடுமையினால் திருமணம்  ஆகாமல் பல முதிர் கன்னிகளும்,   சிறுவயதில் கணவனை இழந்த இளம் விதவைகளும்,  பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும்,  திருமணம் செய்ய தகுதி படைத்தோர் அப்படி செய்யவும்,  அப்படி இயலாதோர்  பிரச்சாரமாவது செய்தால் என்ன?  எதற்கும் வழிகாட்டியாய் இருக்கும்  (தவ்ஹீத் ஜமாஅத்)  தவ்ஹீத் சகோதர்கள்,  இதற்கும் வழியாய் நின்று, அவர்களின் வாழ்வில் ஒளியையும், சமுதாய மானத்தையும் காப்பாற்றினால் என்ன?  திருமணத்தை வலியுறுத்தினால் என்ன?

ஷபனா, மங்களம் பேட்டை

பெண்கள் தேங்கிக் கிடக்கிறார்கள் என்று கருதி சேவை செய்வதற்காக திருமணம் செய்ய முடியாது. முதல் திருமணம் செய்வதாக இருந்தாலும் அது தேவைக்காகத்தான் செய்ய வேண்டும். இரண்டாவது திருமணம் என்றாலும் அதுவும் தேவைக்காகத் தான் செய்ய வேண்டும்.

பெரும்பாலான ஆண்களுக்கு ஒரு மனைவியே போதும் என்ற நிலைதான் உள்ளது. உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இதற்கு சக்தி இருப்பதில்லை. ஒரு மனைவியையே மகிழ்விக்க முடியாமல் மனவிமார்கள் பஞ்சாயத்து வைக்கக் கூடிய அளவுக்குத் தான் இங்கே நிலைமை உள்ளது.

எந்த நாடுகளில் பெண்கள் ஆபாசமாக உடை அணிகிறார்களோ, ஆபாசக் காட்சிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லையோ அந்த நாடுகளில் உள்ள ஆண்களால் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க முடியாது. ஆபாசக் காட்சிகள் தாராளமாகக் கண்களில் படும் போதும், பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நடமாடும் போதும் ஆண்களுக்கு அடிக்கடி கிளர்ச்சி ஏற்படுவதால் அவர்களின் ஆண்மைத் தன்மையில் குறைபாடு ஏற்படுகிறது. இவ்வாறு சம கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது, இது குமுதம் ஏட்டிலும் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது. இதனால் தான் அரபுகளைத் தவிர மற்ற நாடுகளில் உள்ள ஆண்களுக்கு பலதாரமணம் இயலுவதில்லை.

மேலும் நம் நாட்டில் உள்ள உணவுப் பழக்கமும் ஆண்களுக்கு உகந்ததாக இல்லை.

இதன் காரணமாக ஆண்கள் ஒரு மனைவியே போதும் என்று நினைக்கின்றனர். இந்த நிலையில் இன்னொரு திருமணம் செய்யுமாறு கட்டாயப்படுத்துவதில் ஆர்வமூட்டுவதில் அர்த்தம் இல்லை. திருமணம் செய்வது மனைவியரை மகிழ்விக்கத்தான். ஆனால் அது நடக்காது என்றால் திருமணத்திற்கு அர்த்தம் இருக்காது.

யாருக்கு இயல்பாகவே உண்மையாகவே இன்னொருமனைவி அவசியம் என்ற நிலை உள்ளதோ அவர்கள் தாமாகவே அந்த முடிவை எடுத்துக் கொள்வார்கள். இதற்காக இயக்கம் வழிகாட்ட
 
வேண்டிய அவசியம் இல்லை.
உணர்வு 15:48