தவ்ஹீத் ஜமாஅத்தின் பித்ரா வினியோக முறை சரியா?
கேள்வி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஃபித்ரா எனும் தர்மத்தை திரட்டி ஏழைகளுக்கு சிறப்பாக வழங்கி வருகிறது. ஆயினும் இது பற்றி சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவற்றுக்கு விளக்கம் தந்தால் ஃபித்ரா திரட்ட இன்னும் எளிதாக இருக்கும்.
பித்ரா தர்மத்தை எப்போது முதல் திரட்டலாம்?
எப்போது முதல் வினியோகம் செய்யலாம்?
மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503, 1509
இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக்கும், பெருநாள் தொழுகைக்கும் இடைப்பட்ட நேரத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.
பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.
பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாட்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.
பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும் போது, "பெருநாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்'' என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.
ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே "நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்'' என்று நான் கூறினேன். அதற்கு அவன் "எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது'' எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்ற போது, "நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?'' என்று கேட்டார்கள். ''அல்லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்'' என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத்திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து "உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகிறேன்'' என்று கூறினேன். "எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்'' என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்ற போது, "உன் கைதி என்ன ஆனான்?'' என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். "அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்.... என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.
நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட்டது என்பதற்கும் திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்னதாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்துள்ளது.
ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருள்கள் குறைந்த பட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள்ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (அல்லது கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாட்களுக்கு முன்பாகவே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.
நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும் போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக அமையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.
எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும் வரை அதன் கடைசி நேரம் உள்ளது.
ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுக்கலாமா
ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.
ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்களில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யமன் பகுதிக்கு அனுப்பினார்கள். (புகாரி 1395, 1496, 4347)
"அவர்களில் செல்வந்தர்களிடம் திரட்டி அவர்களில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் எந்தப் பகுதியில் திரட்டப்பட்டதோ அங்குதான் விநியோகிக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
இது நோன்புப் பெருநாள் தர்மத்தைப் பற்றிய ஹதீஸ் அல்ல. ஜகாத் பற்றிய ஹதீஸாகும் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.
அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதா?
முஸ்லிம்களில் உள்ள செல்வந்தர்கள், முஸ்லிம்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என்பதற்கு பின்வரும் ஹதீஸ் விடையளிக்கிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் கோத்திரத்தினரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். "இது உங்களுக்கு உரியது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது'' என்று அவர் கூறினார்...
(புகாரி 6979)
பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
எனவே, ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம்.
மேலும் ஏழைகளுக்கு உணவாக பயன்படுவதற்காகவே ஃபித்ரா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.
வசதிபடைத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திரட்டி ஏழைகள் அதிகம் வாழும் பகுதியில் விநியோகம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பொருள் வசதி படைத்த நாடுகளில் வசிப்போர் ஏழைகள் வசிக்கும் பகுதிக்கு அனுப்பினால்தான் ஃபித்ராவின் இரண்டு நன்மைகளையும் பெற முடியும்.
வெளிநாடுகளில் வசிப்பவர்கள் பித்ராவுக்காக திரட்டி தலைமைக்கு அனுப்புகிறார்கள். அவர்கள் திரட்டி அனுப்பி அது தலைமைக்குக் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் பித்ராவுக்காக திரட்டப்பட்ட தொகையில் சிறிதளவு மீதமாகிறது. இவ்வாறு ஒரு தொகை மீதமானால் அந்தத் தொகை அளவுக்கு பித்ரா தொகை வினியோகம் செய்யப்படவில்லை என்று ஆகுமே? ஜமாஅத்தை நம்பி பித்ரா வழங்கிய சிலரின் பித்ரா வினியோகம் செய்யப்படாவிட்டால் அவர்களுக்கு எப்படி பித்ரா நன்மை கிடைக்கும்? அப்படி மீதமாகும் தொகையை தவ்ஹீத் ஜமாஅத் என்ன செய்யும்?
பதில் தவ்ஹீத் ஜமாஅத் எவ்வாறு பித்ராவை வினியோகம் செய்கிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் இந்தக் கேள்விக்கு இடமில்லை.
பித்ரா என்பது ஒவ்வொரு முஸ்லிமின் சார்பிலும் இரண்டரை கிலோ அரிசி அல்லது கோதுமை அல்லது அதன் விலையை வழங்க வேண்டும். வளைகுடா நாடுகளில் 15 திர்ஹம் பித்ரா தொகை வாங்கப்படுகிறது. வளைகுடா நாடுகளில் ஒரு கிலோ அரிசி அல்லது கோதுமை 4 அல்லது 5 திர்ஹம் / ரியால் ஆகும். இரண்டரை கிலோவுக்கு பன்னிரண்டரை ரியால் ஆகும். அதாவது ஒவ்வொரு வளைகுடா சகோதரரரும் தனக்கு கடமையான பன்னிரண்டரை ரியாலை விட இரண்டரை ரியால் அதிகம் வழங்குகிறார்.
ஒரு லட்சம் பேரிடம் நாம் பித்ரா வசூலித்தால் ஒருவருக்கு பதினைந்து ரியால் என்ற அடிப்படையில் 15 லட்சம் ரியால் ஆகிறது. ஒரு நபருக்கான பித்ரா தொகை இரண்டரை கிலோ என்ற கணக்குப்படி இரண்டரை லட்சம் கிலோ அரிசி வழங்கினால் அனைவரின் பித்ராவும் நிறைவேறி விடும். இவர்களிடம் நாம் திரட்டிய 15 லட்சம் ரியாலுக்கு கிலோ ஐந்து ரியால் என்ற கணக்குப்படி மூன்று லட்சம் கிலோ அரிசி வாங்கி வினியோகம் செய்தால் நாம் அனைவரின் சார்பில் கொடுக்க வேண்டியதை விட ஐம்பதாயிரம் கிலோ அரிசியை அதிகமாகவே வழங்கியவர்களாக ஆகிறோம்.ரியால் கணக்கில் இரண்டரை லட்சம் ரியால் கூடுதலாக வழங்கி விட்டோம் இரண்டரை லட்சம் மீதமானால் கூட அனைவரின் பித்ராவுக்கான அரிசி வழங்கப்பட்டு விட்டது
இதில் இன்னொரு சாதகமும் நமக்கு உள்ளது. வெளிநாடுகளில் வசூலித்து அங்கேயே அரிசியை வாங்கி வினியோகித்தால்தான் இந்த நிலைமை அப்படியில்லாமல் அங்கிருந்து இந்திய ரூபாயாக இங்கே அனுப்பப்படும் போது 15 லட்சம் ரியாலுக்கு மூன்று லட்சம் கிலோவுக்கு பதிலாக ஆறு லட்சம் கிலோ அரிசி வாங்க முடியும். அதாவது ஒரு லட்சம் பேருக்காக நாம் வழங்க வேண்டிய அரிசி இரண்டரை லட்சம் கிலோ அரிசியாகும்; நாம் வழங்குவதோ ஆறு லட்சம் கிலோ அரிசி. இவ்வாறான நிலையில் நாம் வழ்ங்கும் பித்ரா தொகை வந்து சேர தாமதம் ஏற்பட்டு அதனால் சிறு தொகை வினியோகிக்கப்படா விட்டால் அதை விட பல மடங்கு அதிகமாகவே நாம் அரிசி வழங்கி விட்டதால் யாருடைய பித்ரா கடமையும் பாதிக்காது. பித்ராவாக திரட்டப்படும் அனைத்து நிதியையும் வினியோகம் செய்வதில் தவ்ஹீத் ஜமாஅத் முனைப்புடன் செயல்பட்டாலும் நம்மையும் மீறி சொற்பமான தொகை மீதமானால் அவை ஜகாத் நிதியில் சேர்ப்பதை நடைமுறைப்படுத்தி வருகிறோம்.
உணர்வு 15:49
In : Q&A