கேள்வி: தாங்கள் மொழிபெயர்ப்பு செய்த குர்ஆன் இடது புறத்திலிருந்து பக்கங்களை திருப்பிப் படிக்கும் வண்ணம் உள்ளது. ஆனால் மற்ற மொழிபெயர்ப்பு குர்ஆன்கள் வலது புறத்திலிருந்து பக்கங்களை திருப்பிப் படிக்கும் வண்ணம் உள்ளது. ஏன் இந்த மாற்றம்?

அஷ்பாக் அஹ்மத், பனங்காட்டூர்

பதில் : எந்த மொழியில் நாம் மொழி பெயர்க்கிறோமோ அந்த மொழி வழக்கப்படி அச்சிட்டால் தான் அம்மொழி பேசுவோர் குழப்பம் இல்லாமல் புரிந்து கொள்வார்கள். தமிழ் மொழி நூல்களை எப்படி அச்சிடுகிறார்களோ அந்த வழிமுறையை இதன் காரணமாகவே நாம் கடைப்பிடிக்கிறோம்.

மேலும் குர்ஆனை அச்சிடுவதற்கு குறிப்பிட்ட வழி முறையைக் கையாள வேண்டும் என்று எந்தக் கட்டளையும் நமக்கு இடப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இடமிருந்து வலமாகவோ அல்லது வலமிருந்து இடமாகவோ குர்ஆன் ஏடுகள் இருக்கவில்லை. இருந்திருக்க முடியாது.

இரு பக்கமும் அச்சிட்டு பைண்டிங் செய்யும் காலத்தில் தான் இது போன்ற பிரச்சினைகளை நாம் சந்திப்போம். ஒரு பக்கம் மட்டும் எழுதி ஒன்றுக்கும் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கும் அந்தக் கால கட்டத்தில் ஒவ்வொரு ஏடாக எடுத்து கீழே வைத்து விட்டு அடுத்த ஏட்டை வாசிப்பார்கள். இரு பக்கமும் அச்சிடும் அல்லது
 
எழுதும் காகிதம் பழக்கத்துக்கு வந்த பின் தான் இந்தப் பிரச்சினையை நாம் சந்திக்கிறோம். எனவே நபிவழியில் சொல்லாமல் விடப்பட்ட ஒன்றை நமது வசதி போல் அமைத்துக் கொள்வதில் ஒரு பிரச்சினையும் இல்லை.
உணர்வு 15:51