கேள்வி: உலகிலேயே தமிழ் மொழி தான் முதல் மொழி அதுதான் சிறந்த மொழி  என்று தமிழர்களும், திருக்குர்ஆன் அரபி மொழியில் இருப்பதால் அரபி மொழிதான் உலகில் சிறந்த மொழி என்று முஸ்லிம்களும் கூறி வருகின்ற நிலையில் எந்த மொழி, முதல் மொழி? எந்த மொழி சிறந்த மொழி? என்பதை விளக்கவும்.

- இப்ராஹிம்ஷா, காவக்காரன்பட்டி (நாமக்கல்)

இஸ்லாத்தின் பார்வையில் எந்த மொழியும் இன்னொரு மொழியை விட சிறந்த மொழி அல்ல. எல்லாம் சமமான தரத்தில் உள்ளவை தான்.

குர்ஆனை இறைவனிடமிருந்து பெற்று மக்களிடம் கொண்டு செல்வதற்கு இறைவன் முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூராக நியமித்தான். முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அரபு மட்டுமே தெரியும். எனவே அரபுமொழியில் குர்ஆன் அருளப்பட்டது.

உலகில் உள்ள மொழிகளில் இறைவனுக்குப் பிடித்தமான மொழி அரபுமொழிதான் என்ற காரணத்திற்காக அரபுமொழியில் குர்ஆன் அருளப்படவில்லை. மாறாக இந்தக் குர்ஆனை மக்களிடம் கொண்டு செல்ல ஏதாவது ஒரு மொழி தேவைப்படுகிறது என்ற அடிப்படையில்தான் அரபுமொழியில் குர்ஆன் அருளப்பட்டது.

எந்த மொழியில் குர்ஆனை இறக்கினாலும் மற்றமொழி பேசுபவர்கள் ஏன் எங்கள் மொழியில் குர்ஆன் அருளப்படவில்லை என்று கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். தமிழ் மொழியில் குர்ஆன் அருளப்பட்டிருந்தால் ஆங்கில மொழி பேசுபவர்கள் ஆங்கிலத்தில் குர்ஆன் ஏன் அருளப்படவில்லை என்று கேட்பார்கள்.

இஸ்லாத்தில் ஒரு குறிப்பிட்ட மொழிக்கு எந்த மதிப்பும் கிடையாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அரபு அல்லாத வேறுமொழி பேசுபவரை விட அரபு மொழி பேசுபவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை. அரபு மொழி பேசுபவரை விட அரபு அல்லாத வேறு மொழி பேசுபவருக்கு எந்தச் சிறப்பும் இல்லை.

நூல் : அஹ்மது (22391)

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் இறைத்தூதர்களை அனுப்பியதாக அல்லாஹ் கூறுகிறான்.

நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் உண்மையுடன் உம்மை நாம் அனுப்பினோம். எந்த ஒரு சமுதாயமானாலும் எச்சரிக்கை செய்பவர் அவர்களுக்கு வராமல் இருந்ததில்லை.

திருக்குர்ஆன் 35 : 24

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பி னோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 14:4

எனவே எல்லா மொழி பேசக்கூடிய மக்களுக்கும் இறைத்தூதர்கள் அனுப்பப்பட்டு இருக்கின்றார்கள். அவரவரது மொழிகளில் அம்மக்களுக்கு இறைவேதங்கள் வழங்கப்பட்டிருந்தன என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது.

 உணர்வு 16:14