பைபிளும் குர்ஆனும் நபிமார்களின் பெயர்களில் ஏன் முரண்படுகின்றன.?
October 24, 2011நூஹூ (நோவா), மூசா (மோசஸ்), ஈஸா (யேசு) போன்ற அனைத்து இறைத் தூதர்களின் பெயர்கள் எப்படி பைபிளுக்கும் குரானுக்கும் வேறுபடுகிறது. பைபிளே வரலாற்றில் மனித கரங்கள் விளையாடியிருந்தாலும் பெயர்கள் எப்படி மாறின? திருக்குர்ஆன் கூறும் பெயர்கள் தான் அவர்களுக்கு இருந்ததா?
ஆரிப் ராஜா மங்களம்பேட்டை
ஒரு மொழியில் உள்ள சொற்களை இன்னொரு மொழியில் பயன்படுத்தும் போது சில மாற்றங்கள் செய்யப்படுவதுண்டு. அது பல்வேறு மொழிகளைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதிக அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டு விடும். உங்கள் ஊர்ப் பெயரை அரபி மொழியில் எழுத முடியாது. ட், டை ஆகிய எழுத்துகள் அரபு மொழியில் இல்லை. அத்துடன் ங் என்ற எழுத்தும் அரபியில் இல்லை. பே என்பதும் அரபியில் இல்லை. எனவே உங்கள் ஊரை அரபியில் எழுதும் போது அந்த மொழிக்கேற்ப பல மாற்றங்களுக்கு உள்ளாகிவிடும்.
மங்கலம் பேட்டை என்பதை மன்கலம் பிதை என்று தான் அரபு மொழியில் எழுத இயலும். இதை வேறு மொழியில் மாற்றினால் இன்னும் பல மாறுதலுக்கு உள்ளாகிவிடும். எபிரேயு மற்றும் அரமாயிக் மொழிகளில் இருந்து கிரேக்க மொழிக்கு மாற்றப்பட்டு அதில் இருந்து ஆங்கிலத்துக்கு மாற்றப்படும் போது ஆட்களின் பெயர்கள் ஊர்கள் மற்றும் இடங்களின் பெயர்கள் சிதைந்து போய் விடும். இதனால் தான் இந்த முரண்பாடுகள் தோன்றியுள்ளன. ஆனால் அரபு மொழியில் நாம் பயன்படுத்துவது தான் சரியான பெயர் என்று நாம் அடித்துச் சொல்ல முடியும். ஏனெனில் ஹிப்ரு மொழியும் அரபு மொழியும் ஏறக்குறைய ஒரே மாதிரியானவை. ஒரே இனத்தைச் சேர்ந்தவை. ஹிப்ரு மொழியில் உள்ள அனைத்து பெயர்களையும் அரபு மொழியில் சொல்ல இயலும். எனவே முஸ்லிம்கள் பயன்படுத்தும் உச்சரிப்புத் தான் சரியான உச்சரிப்பாக இருக்க முடியும்.
உணர்வு 16:02
Posted by Mohamed Hamad. Posted In : Q&A